×

தண்டவாளத்தை கடக்கும்போது மின்சார ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் உடல் சிதறி பலி: ஊரப்பாக்கத்தில் பரிதாபம்

சென்னை: தசரா விழாவை முன்னிட்டு பெற்றோர்களை சந்திப்பதற்காக கர்நாடகாவில் இருந்து வந்த 3 மாற்று திறனாளி பள்ளி மாணவர்கள் ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் மோதியதில் உடல் சிதறி பரிதாப பலியாகினர்.  கர்நாடக மாநிலம், கொப்பளா மாவட்டம் மல்லிகார்ஜுனா நகரை சேர்ந்தவர் ஜம்பன்னா. இவருக்கு மனைவி ஜெயம்மா, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அனுமந்தப்பா என்பவரது மனைவி அஞ்சனம்மா, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். ஜம்பன்னாவின் காது கேட்காத மகன்கள் சுரேஷ் (15), ரவி (12), அனுமந்தப்பாவின் மகன் வாய்பேச முடியாத மஞ்சுநாதன்(11) ஆகிய மூவரும் கர்நாடகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்களது பெற்றோர் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியம்மன் நகரில் தங்கி கடந்த 23 ஆண்டுகளாக தெருக்கூத்து ஆடுவது, இருசக்கர வாகனங்களுக்கு டேங்க் கவர் மற்றும் சீட் கவர் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், 3 மாணவர்களும் தசரா விழாவை முன்னிட்டு பெற்றோரை சந்திப்பதற்காக ஊரப்பாக்கத்திற்கு வந்தனர். 3 பேரும் ஊரை சுற்றி பார்ப்பதற்காக நேற்று காலை 11 மணியளவில் ஊரப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு கை, கால்கள் துண்டான நிலையில் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

சம்பவ இடத்திற்கு தாம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசாரும் விரைந்து வந்தனர். 3 மாணவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டவாளத்தை கடக்கும்போது மின்சார ரயிலில் அடிபட்டு 3 சிறுவர்கள் உடல் சிதறி பலி: ஊரப்பாக்கத்தில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Karnataka ,Dussehra ,Urpakkan ,
× RELATED பெங்களூரில் ஜூன் 15,16 தேதிகளில் கர்நாடக...